Jun 27, 2008

தசாவதாரம்

எந்த‌ பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த வாரம் தசாவதாரம் பார்க்கப் போயிருந்தேன்.வழக்கமாக இந்தியாவில் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு எச்சரிக்கை வராது. சினிமாவிற்கு எக்கச்சக்கமாக வரும்.தசாவதாரத்திற்கும் அப்படியே வந்தது. ஆச்சரியமாக படம் எனக்கு பிடித்திருந்தது.
லெட் மி மேக் இட் க்ளியர். நான் கமல் ரசிகை அல்ல. சில படங்களில் கமலின் நடிப்பு எனக்கு பிடிக்கும். வழ‌க்கமான தமிழ் சினிமா மசாலா, ரேசிங், காமெடி + லூசு ஹிரோயின் என்ற காம்பினேஷன் இருந்தாலும் புதுசாக ப‌யோ வார், சுனாமி, மணல் கொள்ளை என்று முயற்சி பண்ணியிருந்தார்கள்.

அமெரிக்காவிலிருந்து மிஸ் ஆன கொடிய கிருமி தவறுதலாக சிதம்பர மாமியிடம் வந்து சேர அதை துரத்திக்கொண்டு ஹிரோ விஞ்ஞானி கோவிதந்த் கமல் கம் அமெரிக்க வில்லன்,ப்ளெட்சர் கமலும் இந்தியா வருகிறார்கள். உளவுத்துறை அதிகாரி பல்ராம் நாயுடு, 8 அடி கலிபுல்லா, பாடகர் ‍அவதார்சிங், சமூக போராளி வின்சென்ட் கமல், ஜப்பானிய கராத்தே வீரர், சிதம்பரம் பாட்டி என மற்ற கமல்கள் எல்லோரும் மறைமுகமாக ‍‍ஹீரோ கமலுக்கு உதவுகிறார்கள்.கடைசியில் கிருமியே வெளிவரும் சமயம் சுனாமி வந்து தமிழ்நாட்டை காப்பாற்றுகிறது.சுபம்!இந்த‌ ஒன் லைன் கதையை நீட்டி முழ‌க்க மணல் கொள்ளை, சுனாமி, 12 ஆம் நூற்றாண்டு சைவ வைணவ மோதல்களை ஆங்காங்கே பசை போட்டிருக்கிறார்கள்.

பிரேம்க‌ளில் க‌ம‌லை தேடுவ‌தில் முற்பாதியில் நேர‌ம் கழிய‌,பிற்பாதியில் பெருமாளே அசினும், பிரம்மஹஸ்தி கிருஷ்ணவேணி பாட்டி இணைந்து பிளேடு போடுகிறார்கள். 10 வேட‌ங்க‌ளிலும் போட்டி போட்டு பின்னி எடுத்திருக்கிறார் கமல். இருந்தாலும் பல்ராம், ஜ‌ப்பான் க‌ம‌ல், ர‌ங்க‌ராஜன், வின்சென்ட் என்று ஒரு சில‌ரே ம‌ன‌தில் நிற்கிறார்க‌ள். இருந்தாலும பத்திலும் பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதில் கமல் சிரத்தை புரிகிறது.

12ஆம் நூற்றாண்டு ர‌ங்க‌ராஜனாக விஷ்ணு சிலைக்கு போராடும்போதும், பல்ராம் நாயுடுவாக" நூவு தெலுகா? "என்று கேட்கும்போதும் க‌ம‌லின் ந‌டிப்பு இன்னும் சில‌ வ‌ருஷ‌ங்க‌ளுக்கு த‌மில் சினிமாவை காப்பாற்றும் என‌ ந‌ம்ப‌லாம்.(காமிராவை பார்த்து வ‌ச‌ன‌ம் பேசுப‌வ‌ர்க‌ளும், விர‌லில் வித்தை காட்டியே ஓட்டுப‌வ‌ர்க‌ளும் உல‌க‌ நாய‌க‌னிட‌ம் கொஞ்ச‌ம் ந‌டிப்பும் க‌ற்றுக் கொண்டால் ந‌ல்ல‌து.)

கிருஷ்ண‌வேணி பாட்டியின் சேஷ்டைக‌ள் 'மைக்க‌ல் ம‌த‌னை' நினைவு ப‌டுத்தினாலும் கொஞ்ச‌ம் ர‌சிக்கும் ப‌டியாக‌த்தான் இருக்கிற‌து. அவதார் சிங், கலிபுல்லா, அதிபர் புஷ் எல்லோரும் '10'க்கு உத‌வியிருக்கிறார்கள். மற்றப்படி ம‌ன‌சில பதிந்த மாதிரி தெரியவில்லை. சமூக போராளி 'வின்சென்ட்' க‌தாபாத்திர‌ம் உல‌க நாய‌கன் ந‌டிப்புக்கு தீனி. ஜப்பானிய கேர‌க்ட‌ரில் கமல் எவ்வளவு ஹோம் ஒர்க் பண்ணியிருப்பார் என்று யோசித்தால் கமலின் உழைப்பு புரியும்.

கொஞ்ச‌மே வ‌ந்தாலும் 'நிறை'வாக வ‌ரும் ம‌ல்லிகா ஷெராவ‌த் கமலைப் பார்த்து கொஞ்ச‌ம் ந‌டிக்க‌ முய‌ற்சித்திருக்கிறார். "தாராளமாக" பாராட்ட‌லாம்.
சம‌ஸ்கிருத‌ம் க‌ல‌ந்த த‌மிழ் பிராம‌ண பாஷையும் 12ஆம் நூற்றாண்டு த‌மிழ் வ‌ச‌ன‌ங்க‌ளையும் தானே ட‌ப்பிங் பேசி மென‌க்கெட்டாலும் பார்த்து ப‌ழ‌கிய வ‌ழ‌க்க‌மான த‌மிழ் ஹீரோயின் பாத்திர‌ம் என்ப‌தால் அசின் இந்த முறை நோ பிசின். அட அதாங்க ஒட்ட மாட்டேங்குறார். ர‌விவ‌ர்ம‌ன் ஒளிப்ப‌திவும், அஷ்மித் குந்தர் ப‌ட‌த்தொகுப்பும் ப‌ட‌த்திற்கு நிறைவு.

'க‌ட‌வுள் இருக்கிறாரா, இல்லையா' என்னும் விவாதத்திற்கு முடிவு சொல்லாவிட்டாலும் வ‌ச‌ன‌ங்க‌ளில் க‌ம‌லின் தாக்க‌ம் கொஞ்ச‌ம் அதிக‌மாகவே தெரிகிற‌து.பயோ வார், 12ஆம் நூற்றாண்டு மோதல்கள் பார்க்க, தெரிந்து கொள்ள புது விஷயங்கள். ஆனால் அந்த ப்ளஸ் பாயிண்ட்டை க்ளைமாக்ஸில் க‌ம‌ல் அசின் பேசும் காதல் வ‌ச‌ன‌ங்கள் காலி பண்ணி விடுகிறது.ந‌ல்ல‌ வேளை க‌ம‌ல் அசினை வைத்து ரீமிக்ஸ் போட்டு டூயட் ஆட வைக்க வில்லை. தேங்க்ஸ் டூ கே.எஸ்.ரவிக்குமார்.

'முகுந்தா முகுந்தா', க‌ல்லை ம‌ட்டும் க‌ண்டால் பாட‌ல்க‌ள் ம‌ட்டும் கேட்குமபடி இருக்கிறது. ஹிமேஷ் ரேஷ்மையா இசையையும், தேவி பிர‌சாதின் பிண்ண‌னி இசையையும் போலீஸிடம் சொல்லி தான் தேட வேண்டும்.

க்ளைமாக்ஸ் ஜ‌ப்பான்,வில்ல‌ன் க‌ம‌ல் ச‌ண்டை காட்சிக‌ளும் குறிப்பாக ஹிரோஷிமா ஞாபகம் இருக்கா? பியர்ல் ஹார்பர் ஞாபகம் இருக்கா? வ‌ச‌ன‌ங்க‌ளும் க‌மல் ப‌ட‌ம் என்று முத்திரை குத்துகிறது. ம‌ற்றபடி‌ சாதார‌ண லாரி, கார் பைக் சேஸிங் காட்சிக‌ள் எல்லாம் த‌மிழ் சினிமாவுக்கு ப‌ழ‌க்க‌மான‌வையே.

மொத்த‌த்தில் 'லாஜிக்'கை விட்டுப் பார்த்தால் க‌ம‌ல் 'மேஜிக்'கை ர‌சிக்க‌லாம். ப‌த்து அவ‌தார‌ங்க‌ளோடு ப‌தினோறாவ‌து அவ‌தார‌மாக கிராஃபிக்ஸ் சொதப்பல்களை தவிர்த்திருக்கலாம்.

"க‌ம‌லை ம‌ட்டும் க‌ண்டால்
க‌தையே தெரியாது.
க‌தையை ம‌ட்டும் பார்த்தால்
கமலைத் தெரியாது."

1 comment:

Viki said...

Good comment! Even I was watching Kamal and his efforts only. Though he takes film for himself, I cannot resist myself saying that a man who has dedication, passion towards cinema, only can take this much of pain. For a 1 hour take, 4 hours make up! This is for Kamal and only for him.