'புயலே..புயலே..சுற்றி வரும் புயலே..
பதினெட்டு வயசுப் புயலே"
சினிமாக் கவிஞர்களின் ஃபேவரைட் பெண் உவமைகளில் அடிக்கடி புயல் வீசும்.ஒரு வேளை புயலைப் போலவே அதிகம் பாதிப்பபதால் பெண்களைப் புயல்களோடு ஒப்பிடுகிறார்களோ என்னவோ? இந்தப் பழக்கம் இப்போது விஞ்ஞானிகள் வரைக்கும் தொற்றி விட்டது. சமீபமாக 'நிஷா வரப் போகிறாள்..கிளம்பி விட்டாள்" என்கிற ரேஞ்சுக்கு புயலுக்கு பெண்கள் பெயரை வைத்து லைவ் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் புயல்களுக்கு பெண்கள் பெயரை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்?பாதிப்புகளை கணக்கிடவும், நினைவில் வைத்துக் கொள்ளவும்,மற்ற நாடுகளோடு தொடர்பு கொள்ளும்போது புரிவதற்காக புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஆரம்பமானது.
இந்த பெயர் சூட்டும் வைபவத்தை முதலில் ஆரம்பித்து வைத்தது அமெரிக்காதான்.புது வைரஸ் காய்ச்சல், அல்கொய்தா மிரட்டல் மாதிரி அமெரிக்காவிற்கு பழக்கமான விஷயம் புயல். முதலில் அமெரிக்க விஞ்ஞானிகள் புயல்களுக்கு பெண்கள் பெயரைத்தான் வைத்தார்கள். சில பெண்ணிய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க அலெக்ஸ், ஆர்த்தர்,வில்லியம்,சாம் என்று ஆண்கள் பெயரையும் வைத்தார்கள்.
பின் இந்தப் பழக்கம் ஆஸ்திரேலியாவிற்கு தாவியது. ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் பெயரையும், தங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் பெயர்களையும் புயலுக்கு வைத்து அழகு பார்த்தார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
அப்படியே இந்த பெயர் வைக்கும் பழக்கம் ஏரியா வாரியாக பரவ ஆரம்பித்தது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் கடலில் இருந்து கிளம்பும் புயல் ஆசியா வரை வீசுவதில்லை. இந்தியப் பெருங்கடல், வங்களா விரிகுடா, அரபிக் கடல் இவற்றை ஒட்டி உள்ள, புயலால் பாதிக்கப்படும் நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொண்டு பெயர் வைக்க ஆரம்பித்தார்கள்.அந்த குரூப்பில்தான் இந்தியா இருக்கிறது.
ஆசிய கண்டத்தில் இந்தியா, மியான்மர், பாகிஸ்தான், இலங்கை,ஓமன், மாலத்தீவு,வங்காள தேசம்,தாய்லாந்து என எட்டு நாடுகளும் ஆண்டிற்கு ஒரு முறை கூடி புயல்களை பற்றி டிஸ்கஷன் செய்வார்கள். இதில் ஒவ்வொரு நாடும் அவர்களது தேசிய மொழியில் ஆறு பெயர்களை சாய்ஸாக கொடுப்பார்கள். நிஷா(வங்காள தேசம்)வில் ஆரம்பித்து நர்கிஸ்(பாகிஸ்தான்), ரஷ்மீ(இலங்கை),ஆயிலா(மாலத்தீவு) என நாம் கேள்விப்பட்ட பெயர்கள் பிறந்த கதை இதுதான். பிஜ்லி,அக்னி, ஆகாஷ்,ஜல்,சாகர்,வாயு இதெல்லாம் இந்தியாவின் லிஸ்ட்.
நிவாரணப் பணிகள் ரெடியோ இல்லையோ வரப் போகும் புயல்களுக்கான பெயர்கள் பக்காவாக ரெடி. ஆசிய கடல்பகுதியில் வீசப் போகும் புயல்களுக்காக மட்டும் இப்போது 64 பெயர்களை கைவசம் ரெடியாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் வங்காள தேசத்தை ஒரு காட்டு காட்டிய ஆயிலா இந்த லிஸ்ட்டில் லிஸ்ட்டில் 17வது இடத்தில் இருக்கிறது. 'ஃயன்', 'வார்டு', 'லைலா' இதெல்லாம் ஆயிலாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பெயர்கள்.
இந்தியாவை பொறுத்த வரையில் புயல்களின் பெயர்கள் கலாச்சாரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசாங்க விதி. இதனால் பெரும்பாலும் பூக்கள் அல்லது இயற்கை சார்ந்த பெயர்களையே புயலுக்கு வைக்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள்.(பூ ஒன்று புயலானது!)
விஞ்ஞானிகள் சென்ட்டிமென்டாக ஒரு பெயரை ஒரு புயலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் புயலுக்கு ஏது சென்டிமெண்ட்.. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிப்பது போல போகிற போக்கில் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறது!
No comments:
Post a Comment